search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா பரிசோதனை"

    • சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.
    • பிற நாடுகள் சீனாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.

    நியூயார்க்:

    சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவுக்கு பலர் இறந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த வித தகவல்களையும் சீனா தெரிவிக்கவில்லை.

    சீனாவில் கொரோனா உச்சம் அடைந்துள்ளதால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    பிரான்ஸ், தென் கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் சீனா பயணிகளுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அவசியம் என அறிவித்து உள்ளன.

    தங்கள் நாட்டில் கொரோனோ கட்டுப்பாட்டில் உள்ளது. பிற நாடுகள் சீனாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.

    ஆனால் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கவலை அளிப்பதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்தார்.

    இதன் தொடர்ச்சியாக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் சீனா மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    அப்போது சீனாவில் தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலை, எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    கொரோனாவை தடுக்க என்னனென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து ஆலோசித்தனர்.

    இந்த நிலையில் கொரோனா குறித்து வெளிப்படையான தகவல்களை பகிர வேண்டும் என்றும் சீனாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி கூடுதல் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு மீண்டும் சீனாவை வலியுறுத்தி உள்ளது.

    • கொரோனா தொற்று பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்ப பரிசோதனை முக்கியமாக கருதப்படுகிறது.
    • சளி, இருமல் உள்ளிட்ட இதர அறிகுறிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    கோவை விமான நிலையத்திலும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயனிகளிடம் பரிசோதனை செய்யப்படுகிறது.

    தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை எந்திரம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சிலர் காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டு பயணிப்பதாகவும், அவர்கள் விமான நிலைய வளாகத்தில் பரிசோதனையில் இருந்து தப்பி செல்வதையே நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கொரோனா தொற்று பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்ப பரிசோதனை முக்கியமாக கருதப்படுகிறது. இதுதவிர சளி, இருமல் உள்ளிட்ட இதர அறிகுறிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    ஒருசில பயணிகள் தங்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதை மறைக்க காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டு பயணிக்கின்றனர்.

    அவர்களின் நோக்கம் பரிசோதனைகளில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பது தான். ஆனால் வீட்டுக்கு சென்ற உடல்நிலை மேலும் மோசமடைந்து அதற்கு பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதுபோன்று பரிசோதனையில் சிக்காமல் வெளியேறும் நபர்கள் சமுதாயத்தில் நோய் பரவல் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றனர்.

    எனவே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், ஜனவரி 1-ந்தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து வருவோருக்கு நெகட்டிவ் ஆர்.டி.பி.சிஆர். சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மேலும், பயணத்திற்கு முன் பயணிகள் தங்கள் பரிசோதனை செய்த அறிக்கையை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    நியூயார்க்:

    சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா, சீனாவில் இருந்து வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகள் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

    • ரத்ததானம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது.
    • ரத்தத்தை வைத்து ஓவியம் வரைவது சரியான அணுகுமுறையல்ல.

    திருச்சி:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்மைக்காலமாக உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் துறையின் அலுவலர்களுடனான கூட்டத்தை நடத்தி அதில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தினார்.

    அந்த வகையில் சர்வதேச விமானங்களில் வருபவர்களை கடந்த காலங்களில் 2 சதவீதம் பரிசோதனை தொடர்ந்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

    அதன்படி திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீனா, தைவான், ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா போன்ற ஐந்து நாடுகளிலிருந்து வருகின்ற பயணிகளுக்கு 100 சதவீத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புதிய கலாச்சாரம் ஒன்று தலைதூக்கியுள்ளது. பிளட் ஆர்ட் என்ற ரத்தத்தை எடுத்து ஓவியம் வரைந்து விரும்புவர்களுக்கு அனுப்புவது, குறிப்பாக காதலர்களுக்குள் அனுப்புவது போன்ற பழக்கம் புதியதாக வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மையம் ஒன்றை ஆரம்பித்து அதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

    ரத்ததானம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது. எனவே அந்த ரத்தத்தை வைத்து ஓவியம் வரைவது சரியான அணுகுமுறையல்ல. இது முறையாக பாதுகாப்பு இல்லாத ஒன்றாகும்.

    அந்த ரத்தத்தை படம் வரைவதற்கு கையாளும் போது, அந்த ரத்தம் எச்.ஐ.வி. போன்ற நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்டால் அது பலரை தாக்கி, பாதிப்பிற்குள்ளாக்கும். எனவே இந்த தகவல் தெரிந்தவுடன் நேற்றைக்கு சென்னையில், வடபழனி மற்றும் தியாகராயநகர் பகுதியில் இருக்கின்ற பிளட் ஆர்ட் நிறுவனங்களில் நமது மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.

    அங்கிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுளளது. இதோடு இந்த தொழிலை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் நிறுவனம் அல்லது கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடைவிதிக்கப்படுகிறது. இதை யாராவது மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    முகக்கவசம் அணிவது, சானிடைசர் உபயோகிப்பது தனிமனித இடைவெளி பின்பற்றுவது என்பது கொரோனா விதிமுறைகளுள் ஒன்றுதான். அது இன்னும் நீக்கப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு என்பது உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருப்பதால் முகக்கவசம் அணிவது அவரவர் உயிரை அவரே பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.

    பி.எ.5 என்கின்ற வைரஸின் உள்உருமாற்றம் பி.எப்.7 ஆகும். இது எந்த அளவிற்கு பாதிப்பை இந்தியாவில் ஏற்படுத்தும் என்பதை தற்போது கணிக்க முடியாது. ஆனால் சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி பல உயிர்கள் பிரிய காரணமாக உள்ளது.

    ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை முதலமைச்சர் தடுப்பூசி போடும் பணியினை ஒரு இயக்கமாகவே மாற்றிய காரணத்தினால் முதல் தவணை தடுப்பூசி 96 சதவீதத்தையும், 2-ம் தவணை 92 சதவீதத்தையும் தொட்டிருக்கிறது. பூஸ்டர் தவணை தடுப்பூசி கையிருப்பு இருந்தவரை போடப்பட்டுள்ளது.

    இதன்காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி என்பது தமிழ்நாட்டில் 90 சதவீதம் தொட்டிருக்கிறது. எனவே கடந்த 6 மாதங்களாக கொரோனாவிற்கான உயிர்இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை, பாதிப்பும் 10 என்ற எண்ணிக்கையின் கீழே நிலவிக்கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    அதன்படி டிசம்பர் 24,25 மற்றும் 26 ந் தேதிகளில் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டன. அதன்படி மொத்தம் 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களுக்கு பி.எப்.7 ரக கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனைமுறை நடத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகும் வகையில் நாடு முழுவதும் நேற்று பிரமாண்ட மருத்துவ ஒத்திகை நடைபெற்றது. 


    டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், இந்தியாவில் கொரோனா பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.

    கொரோனா உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் அது அதிகரிக்க கூடும் என்பதால் ஒட்டு மொத்த கொரோனா தடுப்பிற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு பரிசோதனைகள் அதிகமாக நடக்கின்றன.
    • இவர்கள் தவிர மற்ற பயணிகள் விருப்பப்பட்டால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    ஆலந்தூர்:

    உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது.

    இதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் தொடங்கப்பட்டு உள்ளது.

    சென்னை விமான நிலையம் சர்வதேச முனையம் வருகைப் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை தமிழக சுகாதாரத்துறை தொடங்கி உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த பரிசோதனை நடக்கிறது.

    இந்த நாடுகளில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் பயணிகள் மாறி வருவதால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர்.

    அவர்களில் தேர்வு செய்யப்பட்ட 2 சதவீதம் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடக்கிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 600 பயணிகளுக்கு புதிய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    விமானங்களில் வரும் போது, இருமல், சளி மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் இருக்கும் பயணிகளை 2 சதவீத பரிசோதனைக்கு உட்பட்ட பயணிகளாக, தேர்வு செய்கின்றனர்.

    குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு, இந்த பரிசோதனைகள் அதிகமாக நடக்கின்றன. இவர்கள் தவிர மற்ற பயணிகள் விருப்பப்பட்டால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    12 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை கிடையாது.

    ஆனால் அவர்களில் யாருக்காவது, இருமல், சளித்தொல்லை போன்றவைகள் அதிகமாக இருந்தால், அவர்களுக்கும் பரிசோதனை நடக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இவ்வாறு பரிசோதனைக்கு உட்படும் பயணிகள் சிறிது நேரத்தில் தங்களுடைய பரிசோதனை முடிவுகளை வாங்கிவிட்டு செல்லலாம். அந்தப் பரிசோதனை முடிவில், அவர்களுக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

    அதோடு அந்தப் பயணிகள் மருத்துவமனைகள் அல்லது அவர்களின் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ள சுற்றுலா பயணிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
    • இந்தூரில், ஜனவரி 7-ந் தேதி, வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மாநாடு தொடங்குகிறது.

    புதுடெல்லி :

    சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

    அதனால், இந்தியா கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே கட்டாயமாக ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஒவ்வொரு சர்வதேச விமானத்தில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்காவது கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த உத்தரவு, சென்னை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் கடந்த சனிக்கிழமை அமலுக்கு வந்தது.

    இந்த நடவடிக்கை, இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ள சுற்றுலா பயணிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயத்தில், பண்டிகை விடுமுறைக்கு இந்தியா வர திட்டமிட்டிருந்த வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் பயண திட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில், ஜனவரி 7-ந் தேதி, வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மாநாடு தொடங்குகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    அங்கு செல்ல திட்டமிட்டு இருந்த இந்தியர்கள், விமான டிக்கெட் முன்பதிவு செய்து விட்டனர். இந்தூரில் தங்கும் விடுதியையும் முன்பதிவு செய்து விட்டனர். இந்த நேரத்தில், இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் இந்திய சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் அங்குர் வைத்யா, தாங்கள் குழப்பத்தில் இருப்பதாகவும், மத்திய வெளியுறவு அமைச்சகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    அமெரிக்காவில் உள்ள பீகார் அறக்கட்டளையின் தலைவர் அலோக் குமாரும் இதே கோரிக்கையை விடுத்துள்ளார்.

    அதே சமயத்தில், இந்த மாநாட்டை தவிர்த்து, விடுமுறையை கழிக்க வர வேண்டிய இந்தியர்கள், ஏற்கனவே குடும்பத்துடன் வந்திருப்பார்கள் என்றும், அவர்களுக்கு இந்த உத்தரவால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஆனால், சீனாவில் கொரோனாவால் இந்தியர்களும் பாதிக்கப்பட்டு இருப்பதால், அங்கிருந்து யாரும் இந்தியா வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

    • ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 27.76 லட்சம் பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
    • தற்போதைய நிலையில் மாவட்டத்தில் 3,406 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிக அளவில் இருந்தது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் மாநகராட்சி ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக தற்போது மாவட்டத்தில் கொேரானா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் 23 லட்சத்து 77,315 பேர் உள்ளனர். இவர்களில் 1 லட்சத்து, 36,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 1 லட்சத்து 35,922 பேர் குணமடைந்தனர்.

    இன்றைய நிலையில் 2 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரேனாவால் இறந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.12.74 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 27.76 லட்சம் பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

    மாவட்ட அளவில் 18 வயதுக்கு மேற்பட்ட 16.56 லட்சம் பேர் முதல் தவணையும், 15.38 லட்சம் பேர் 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 90,763 பேர் முதல் தவணையும், 80,658 பேர் 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

    12 முதல் 14 வயதினரில், 56,519 பேர் முதல் தவணையும், 45,679 பேர் 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மொத்தமாக 18 லட்சத்து 3,771 பேர் முதல் தவணை யும், 16 லட்சத்து, 64,180 பேர், 2-ம் தவணையும், 2 லட்சத்து, 13,545 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.

    தற்போதைய நிலையில் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, 8 அரசு மருத்துவமனை, 76 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3,406 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மரபணு பரிசோதனைக் கூடத்தில், தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • 3 மாதங்களுக்குத் தேவையான மருந்து கையிருப்புகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை முறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தற்போது உலகம் முழுவதிலும், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பி.எஃப்-7 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. தமிழகத்தில் முதல்-அமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட மரபணு பரிசோதனைக் கூடத்தில், தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழகத்தைப் பொருத்தவரை 1.25 லட்சம் அளவுக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 72 ஆயிரம் படுக்கைகளை, கொரோனா பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவான வகையில் தயார் நிலையில் உள்ளன. மேலும் 3 மாதங்களுக்குத் தேவையான மருந்து கையிருப்புகள் உள்ளன. ஆக்சிஜனைப் சிலிண்டர்கள், கான்சென்டேட்டர்கள், ஜெனரேட்டர்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளன. எனவே மக்கள் பெரிய அளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

    மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் ரேண்டம் முறையில் 2 சதவீதம் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று முதல் அந்த பரிசோதனைகள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட 4 பன்னாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பயணிகளின் உடல் வெப்பநிலையைக் கண்காணிக்கவும், யாருக்காவது அதிகமான வெப்பநிலை கண்டறியப்பட்டால், அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    • மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை துபாய் விமானம் வந்தது.
    • பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்திலும் கொரோனா கட்டுபாடுகள் இன்று அமலுக்கு வந்தன. சிங்கப்பூர், இலங்கை, துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரைக்கு விமானங்கள் வருகின்றன. இந்த நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை துபாய் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.

    துபாய் விமானத்தில் மொத்தம் 187 பயணிகள் வந்தனர். அவர்களில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என்றார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறும்போது, "சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்" என்றார்.

    ×